Thursday, September 22, 2011

மூன்றாம் தலைமுறை-தொலைத்தொடர்புத்திட்டம்.

     அன்பு நண்பர்களே,வணக்கம்.       

     இப்பதிவில் உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு ( Universal Mobile telecommunication System) குறித்துக் காண்போம்

     இந்த மூன்றாம் தலைமுறைத் தொலைத்தொடர்புத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் அல்லது பயன்கள்:

    1. இரண்டு மெகாபிட்ஸ் வரை வேகம்

    2. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான வேகம் இல்லாது பயன்பாட்டின் அடிப்படையில் வேகத்தினை அதிகரிக்கவோ குறைக்கவோ இயலும் வசதி

      3. ஒரே நேரத்தில் பல சேவைகளைப் பயன்படுத்தும் வசதி, அதாவது ஒரே நேரத்தில் பேச்சு , தரவு மற்றும் ஒளித்தோற்றப் படங்களைக் காண இயலும்

     4. அலையல் (Roaming) செய்யும் இடத்தில் மூன்றாந்தலைமுறை வலையமைப்புகள் இல்லாவிடினும் அவ்விடத்தில் இயங்கும் ஜி எஸ் எம் வலையமைப்பினைப் பயன்படுத்திக் கைமாறுதல் (Hand over) செய்தல்

     5. உயர்நிலை இணைப்பிலும் (Uplink) தாழ்நிலை இணைப்பிலும் (Downlink) வெவ்வேறு வேகத்தில் தொடர்பேற்படுத்த வசதி .

       உதாரணமாக;- இணையத்தில் உலவும் போது நீங்கள் பெறும் தகவல்கள் நீங்கள் அனுப்பும் தகவல்களைவிட அதிகமாக இருக்கும். 

    எனவே தாழ்நிலை வேகம் அதிகமாகவும் உயர்நிலை வேகம் குறைவாக இருந்தாலும் அதனால் பாதிப்பில்லை.

     யு. எம். டி .எஸ். அமைப்பின் தொழில் நுட்பத் தகவல்களை முதலில் பார்த்து விடுவோம்.

       அதிர்வெண்: ஜி எஸ் எம் உலகமெங்கும் நான்கு விதமான அதிர்வெண் பட்டையில் இயங்குகிறது என்று பார்த்தோம் (850, 900, 1800 மற்றும் 1900 மெகாஹெர்ட்ஸ்) 

        மூன்றாம் தலைமுறை வலையமைப்பு மற்றும் செல்பேசிகள் இயங்கும் அதிர்வெண் பட்டையானது 2 கிகாஹெர்ட்ஸ் பட்டையைச் சுற்றி அமைகிறது. 

     வழக்கம் போல் வட அமெரிக்க வலையமைப்புகளில் இந்த அதிர்வெண் பட்டை உலகின் மற்ற பகுதிகளிலிருந்து சிறிது வேறுபட்டிருக்கிறது. 


      ஐரோப்பா, ஆசியா ( ஜப்பான் கொரியா உட்பட) ஆகிய பகுதிகளில் மூன்றாம் தலைமுறை அதிர்வெண் பட்டை கீழ்க்கண்டவாறு அமைகிறது:


       1.920 கிகாஹெர்ட்ஸ் முதல் 1.980 கிகாஹெர்ட்ஸ் வரை :  இந்தப்பட்டை செல்பேசியிலிருந்து வலையமைப்பிற்குத் தகவல் அனுப்ப உதவும் பட்டை (உயர்நிலை இணைப்பு)

        2.110 கிகாஹெர்ட்ஸ் முதல் 2.170 கிகாஹெர்ட்ஸ் வரை:  இந்த அதிர்வெண் பட்டை வலையமைப்பிலிருந்து செல்பேசிக்குத் தகவல்களை அனுப்ப உதவுவது (தாழ்நிலை இணைப்பு)


      மேலே சொன்ன அதிர்வெண் பட்டையைப் பயன்படுத்தித் தகவல் பரிமாறுவதற்கு, அதாவது இருவேறு அதிர்வெண் பட்டைகளில் தகவல்களை அனுப்பிப் பெறும் முறைக்கு இருவழி அதிர்வெண் பகுப்பு (Frequency Division Duplex , FDD ) என்று பெயர்.


       இது தவிர, ஒரே அதிர்வெண் பட்டையை தகவல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் (வலையமைப்பு மற்றும் செல்பேசியின் செலுத்தி, பெறுநர் இரண்டும்) பயன்படுத்தும் இன்னொரு நுட்பமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இருவழி நேரப்பகுப்பு (Time Division Duplex , TDD) என்று இதற்குப் பெயர். 

       இந்த நுட்பத்தில், ஒரே அதிர்வெண் பட்டை இருவழிகளிலும் ( தகவல் அனுப்ப மற்றும் பெற) பயன்படுத்தப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தகவல் அனுப்ப மட்டும் முடியும். தகவல் அனுப்பி முடிந்ததும் அடுத்த நேரத்துண்டில் தகவல் பெறலாம். 

      இந்த நுட்பத்தைப் பயன்படுத்த 1.900 கிகாஹெர்ட்ஸ் முதல் 1.920 கிகாஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண் பட்டை அனுமதிக்கப் பட்டிருக்கின்றது.

       மூன்றாந்தலைமுறைக் கம்பியில்லாத் திட்டத்திற்கு வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அதிர்வெண் பட்டையையும் குறித்துக் கொள்ளலாம். 

       உலகின் பிற பகுதிகளில் மூன்றாந்தலைமுறைத் திட்டத்திற்கென புதிய அதிர்வெண் பட்டை அனுமதிக்கப்பட்டது போன்று வட அமெரிக்காவில் புதிய அதிர்வெண் பட்டை எதுவும் அனுமதிக்கப் படவில்லை.

        அமெரிக்காவில் ஏற்கனவே இயங்கிவந்த தனியாள் தொடர்பு அமைப்புத் ( Personal Communication System, PCS) திட்டத்தில் பயன்படுத்தி வந்த அதிர்வெண் பட்டையை மூன்றாம் தலைமுறைத் திட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. 

      பி ஸி எஸ் திட்டத்தில் 1.850 கிகாஹெர்ட்ஸ் முதல் 1.910 கிகாஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்பட்டை உயர்நிலை இணைப்பிற்கும், 1.930 கிகாஹெர்ட்ஸ் முதல் 1.990 கிகாஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்பட்டை தாழ்நிலை இணைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.


      பயன்படுத்தும் நுட்பம்: அகலப்பட்டை ஸி டி எம் ஏ (Wideband C D M A , WCDMA ) . தரவு வேகத்தை அதிகப்படுத்தித் தரும் நுட்பமாதலால் மூன்றாம்தலைமுறை நுட்பத்திற்கு அகலப்பட்டை ஸி டி எம் ஏ பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. 

             தகவலைச் சுமந்து செல்லும் வானலை (ஊர்தி அலை, carrier frequency)  5 மெகாஹெர்ட்ஸ் அகலமுடையது . நினைவிருக்கிறதா? ஜி எஸ் எம் திட்டத்தில் பயன்படுத்திய அதிர்வெண் பட்டையின் அகலம் இருநூறு கிலோஹெர்ட்ஸ் தான் .  

         குறியீட்டுப் பகுப்புப் பல்லணுகல் (Code Division Multiple Access , CDMA) முறை குறித்து எளிதாய் விளக்கலாம். 

       ஒரு குறிப்பிட்ட வானலை வளத்தை (Radio Resource) நிறையப் பயனாளர்கள் பயன்படுத்த அமைந்த முறைகள் தான் பல்லணுகல் வகைகள் (Multiple Access methods) . 

        ஜி எஸ் எம் நுட்பத்தில் நேரப்பகுப்புப் பல்லணுகல் (TDMA) மற்றும் அதிர்வெண் பகுப்புப் பல்லணுகல் (FDMA) முறையும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணை ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கிப் பயன்படுத்தப்பட்ட நுட்பம் ஜி எஸ் எம் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. 

        குறியீட்டுப் பகுப்புப் பல்லணுகல் முறையின்படி, அனைத்துப் பயனாளார்களுக்கும் எல்லா நேரத்தில் ஒரே அதிர்வெண் அளிக்கப்படும். அப்படியானால் எந்தப் பயனாளருக்கு எந்தத் தகவல் அனுப்பப் பட்டுள்ளது என்பதை எவ்வாறு தெரிவது? 

       ஒவ்வொரு பயனாளருக்கும் அனுப்பப் படும் தகவல்கள் குறியீடு (Encode) செய்து அனுப்பப் படும் . ஒவ்வொரு பயனாளருக்கும் ஒரு குறிப்பிட்ட குறியீடு வழங்கப்படும். இதனால் வருகின்ற தகவல்களைக் குறிநீக்கம் (Decode) செய்து பார்த்து, 

       அத்தகவல்கள் தனக்கு வழங்கப்பட்ட தகவல்தான் என்பதை கைக்கருவிகள் உறுதி செய்கின்றன.


        ஸி டி எம் ஏ நுட்பத்தில் ஒரு கூறிப்பிட்ட பயனாளருக்கு அளிக்கப்படும் குறியீடு மிக நீளமானது. பிறர் எளிதில் குறிநீக்கம்
செய்து தகவலைத் திருடி விட முடியாத வண்ணம் மிக நீளமான குறியீட்டுத் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறன.

      நாம் அனுப்பும் அல்லது வலையமைப்பு அமைப்பும் பேச்சு மற்றும் தரவுத் தகவல்கள் , மிகப்பெரிய குறியேற்றத் தகவல்களுடன் ஏற்றம் செய்யப்பட்ட பின்னரே வானலையாய் மாற்றப்பட்டு அனுப்பப் படுகின்றன, 

      இவ்வாறு நீளமான குறியேற்றத் தகவல்களை அனுப்ப அதிக அளவு அதிர்வெண் பட்டை தேவைப்படும். ஆகவே ஸி டி எம் ஏ நுட்பத்தின் அதிர்வெண் பட்டை அகலமாய் அமைந்திருக்கிறது .

        மூன்றாந்தலைமுறைத் திட்டத்தின் அடிப்படை அம்சமே "அதிக அளவு தரவு அனுப்பும் வசதி " என்பதால், அகலப்பட்டை ஸி டி எம் ஏ நுட்பம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

       இது தவிர , அகலப் பட்டை ஸி டி எம் ஏ நுட்பத்தைப் பயன்படுத்துவதால் , செலுத்தி/ பெறுநரின் திறன் கட்டுப்பாட்டை ( Power control) சிறப்பான அளவில் செயல்படுத்த முடியும்.

         சந்தை நிலவரம்
சென்ற காலாண்டில் செல்பேசி விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கின்றது, உலகெமெங்கும் சுமார் 208 மில்லியன் செல்பேசிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன, மூன்று மாதங்களுக்குள் 200 மில்லியன் செல்பேசிகள் விறபனை ஆவது இதுவே முதல்முறை. 

           முதல் ஐந்து இடத்தைப் பிடித்த செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் நல்ல லாபம் ஈட்டியுள்ளன, சென்ற காலாண்டின் சிறப்பான விற்பனைக்கு , வளரும் சந்தைகளான இந்தியா, தென் அமெரிக்க நாடுகள் ஒரு முக்கியக் காரணம்     
      இருப்பினும் சென்ற காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காமெரா செல்பேசிகளும், இசை பேசிகளும் நல்ல அளவில் ஐரோப்பியச் சந்தையில் வரவேற்புப் பெற்றிருக்கின்றன. 

        நோக்கியா வழக்கம் போல் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 

      முதல் ஐந்து நிறுவனங்களும் அவை விற்ற செல்பேசிகளின் எண்ணிக்கையும் கீழே.


      1. நோக்கியா - 66.6 மில்லியன்
      2. மோடரோலா - 38.7 மில்லியன்
      3. ஸாம்ஸங் - 26.8 மில்லியன்
     4. எல் ஜி - 15.5 மில்லியன்
     5. ஸோனி எரிக்ஸன் - 13.8 மில்லியன்

No comments:

Post a Comment