Friday, September 23, 2011

சமையல் டிப்ஸ்

  1. உளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா தோசை செய்வது போல் செய்யலாம்.
     
  2. தக்காளி சட்னி செய்யும்போது கொஞ்சம் எள்ளையும் வறுத்து கலந்து அரைத்தால் நன்கு ருசியாக இருக்கும்.
     
  3. பாசிபருப்பு பாயசம் செய்யும் போது வெல்லத்தை கெட்டி பாகாக காய்த்தபின் செய்தால் பாயசம் ருசியாக இருக்கும். மறுநாள் இருந்தாலும் ஊசி போகாது.
     
  4. அடைக்கு ஊற வைக்கும்போது பயறுகளை ஊற வைத்து அரைத்தால் சத்து அதிகமாக இருக்கும். கொஞ்சம் கொள்ளையும் சேர்த்து கொள்ளவும்.
     
  5. ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாயும் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் வாசனையாக இருக்கும்.
     
  6. பூரிக்கு மாவு பிசையும்போது அதில் பிரெட்டையும் போட்டு பிசைந்து பூரி செய்தால் உப்பியும், நன்கு மொறுமொறுப்பாகவும் வரும்.
     
  7. முழம்பில் காரம் அதிகம் ஆகி விட்டால் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் சரியாகி விடும். தக்காளியை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
     
  8. பாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.
  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.
மையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.
ந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]
மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.

6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.

16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் 1+1 என்ற அளவில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் பலப்படும்.

1 ஸ்பூன் தேனில் கடுகு அளவு லவங்கபொடியை குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம்பெறும்.

சிறிய வெங்காயத்தின் சாறு 1 ஸ்பூன்,தேன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட உடலின் சக்தி கூடும். இஞ்சியை தோல் நீக்கி, துண்டாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு துண்டுகள் 4 முறை சாப்பிட சக்தி கூடும்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து உண்டால் சளி, கபகட்டு, வயிறு சம்பந்தபட்ட நோய்கள் தீரும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் தலைசுற்றலுக்கு நல்லது.

சிறிது சுக்கை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வாயு,விக்கல் போகும். சூட்டினால் வயிற்றில் வலி இருந்தால் சுடுநீரில் [1கப்] பெருங்காயம், துளி உப்பு கலந்து மெதுவாக குடித்தால் குணம் தெரியும். 1ஸ்பூன் சீரகத்தை நன்றாக மென்று தின்று 1 டம்ளர் சுடுநீர்[ வெந்நீர்] மெல்ல குடித்தாலும் குணம் தெரியும்.

பேரிச்சம்பழம் 5 தினமும் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடி நரம்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.பாசி பயறை முளைகட்டி சாப்பிட, வெந்நீரில் தினசரி தேன் கலந்து சாப்பிட, நெல்லிக்காயை[அ] நெல்லி பொடியை தேனில் கலந்து சாப்பிட, வாரம் ஒரு தடவையாவது சுண்டைக்காயை சமையலில் சேர்த்துகொள்ளலாம். வசம்பு பொடியை காலை,மாலை 1/4 ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தாலும் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

ஃபிரிட்ஜ் இருக்கிறதே என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம். மலிவாக கிடைக்கிறது என்றும் ஃப்ரிட்ஜில் காய்களை அடைக்க வேண்டாம். 2 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் வைக்கும் கவர்களை மாற்ற வேண்டும். பார்க்காமல் விட்டால் எல்லாம் அழுகி போய்விடும். தினமும் அரிசி உணவை குறைத்து காய்கள்,பழங்கள், சூப்,சாலட், என்று சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும்.

தேங்காய் நிறைய இருந்தால் துருவி ஃப்ளாஸ்டிக் பாக்ஸில் போட்டு ஃப்ரிசரில் வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அப்போதுதான் துருவியதுபோல் இருக்கும். ஆனால் 2 நிமிடம்முன்பே தேவையானதை எடுத்து வெளியில் வைத்து கொள்ள வேண்டும். சட்னிக்கு தேவைஎனில் அதில் கொஞ்சம் சுடுநீர் ஊற்றி ஆறியபின் உபயோகபடுத்தலாம்.

முட்டைகோஸ் வாங்கும்போது இலைபிரியாமலும்,பச்சையாகவும் இருந்தால் புதியது. கீரைகள் மஞ்சளாக இருந்தாளோ, பூத்து இருந்தால் அது பழையது.

டிப்ஸ் [பாயசம் சுவை அதிகரிக்க]


1. தீயை மிதமாக எரியவிட்டு பாலை சுண்டவிட்டால் பாயசம் திரட்டுபால் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

2. பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை தீயை குறைத்து வேக வைத்தால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால்கூட தீய்ந்து போய்விடாது. மிதமாக எரிவதால் சுவை கூடும்.

3. பால் கெட்டியாக இருந்து, பால் சுண்டும் நிறம் தேவை எனில் [லைட் ப்ரவுன்] வெறும் வாணலியில் காய்ந்தபின் 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு குறைந்த தீயில் வைத்து கரைய விட்டால் அந்த கலர் வரும். அதில் செய்த பாயசத்தை கலந்தால் பாலை சுண்ட வைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

4. சூடாக பரிமாறும் பாயசங்களை விட, குளிர வைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு கூடுதலாக சர்க்கரை போடனும். [ சிலர் பாயசம் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்களுக்கு]

5. பாயசத்துக்கு ஏலக்காய் பொடி செய்பவர்கள் ஏலக்காயை லேசாக வறுத்து கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் மிகவும் செளகரியமாக இருக்கும். ஏலக்காய் போட்டு செய்யும் ஸ்வீட்களுக்கு போட்டு கொள்ளலாம்.

6. கண்டென்ஸ்ட்டு மில்க் வாங்கி சேர்க்க முடியாத நிலையில், பாலையே அதிகமாக சேர்த்து காய்ச்சும்போது சிறிய தட்டை பால் காய்ச்சும் பாத்திரத்தில் போட்டுவிட்டால் பால் பொங்காமல் சீக்கிரம் சுண்டி விடும். பால் பாதி சுண்டிய பின் தட்டை எடுத்து விடலாம்.

7. எந்த பாயசம் செய்தாலும் 10,முந்திரி, பாதாம்பருப்பு,பிஸ்தா பருப்பு, இவற்றையும் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு கடைசியில் இறக்கும் சமயம் சேர்த்தால் சுவைகூடும். சில பேர் பருப்புகளை எறிந்து விடுவார்கள். இது தவிர்க்கப்படும். ஏனெனில் இந்த பருப்புகள் எல்லாம் விலை அதிகம்.


     1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது புளியை கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை.

3. மெது வடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும்.

4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர் தெளித்து ஊற்றினால் பொன் தீயாமல் நிறமாக வரும்.

5. பலகாரங்களுக்கு வெள்ளை எள்ளை விட கறுப்பு எள் நல்லது.பார்க்கவும் அழகாக இருக்கும்.ருசியும் சூப்பர்.

6. காய்கறிகளை பொடியாக ந்றுகினால் சீக்கிரம் வெந்து விடுவதுடன், காயின் நிறமும்,சத்தும் கிடைக்கும்.காய் நறுக்கியதை பார்த்தாலே சாப்பிட ஆசை வர வேண்டும்.

7. காய்களை புதியதாக வாங்கி சமைத்தால், சத்தும், வாசனையும் அபாரம்.

8. ஃப்ரிஜ் இருக்கறது என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம்.

9. திட்ட மிட்டு சமையல் செய்தால் பொருளும் வேஸ்ட் ஆகாது. சீக்கிரமாகவும் செய்து விடலாம். ஏனோ தானோ என்று சமைக்க கூடாது. சமையல் ஒரு கலை ஆதலால் பொறுமையாகவும், பக்குவமாகவும், ரசனையுடன் சமைக்க வேண்டும்.

10. திட்டமிட்டு சமையல் செய்ய எல்லாம் ரெடி செய்து கொண்டு அடுப்பை பற்ற வைத்தால் சமைக்கும் நேரமும்,கேஸும் குறைவாகவே ஆகும்.

11. நேரம் கிடைக்கும் போது இஞ்சி, பூண்டை உறித்து, உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், மசாலா குழம்பு வகைகளுக்கு ஏற்றது.

12. பச்சைமிளகாயை உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் சில்லி பேஸ்ட்.

13. மிளகு சீரகம் பொடிசெய்து வைத்து கொண்டால் அவசர ரசத்திற்க்கு கை கொடுக்கும்.

14. கட்டி பெருங்காயம்,வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டால் எல்லா வகை குழம்புகளுக்கும் கை கொடுக்கும்.

15. இஞ்சி நிறைய இருக்கும் சமயங்களில் தோல் சீவி பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், 1/4ஸ்பூன் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்து கொண்டால், வெண் பொங்கல், மற்ற சமையலிலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

16. எந்த பொடி வகை செய்தாலும் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து பொடி செய்து கொண்டால் ரொம்ப நாடகள் ஆனாலும் கெடாது.

17. கலர் பொடி சேர்ப்பத்ற்க்கு பதில் லெமன் சால்ட், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். புளியை ஊற வைக்கும் போதே சிறிது கல் உப்பும் சேர்க்கலாம்.

18. சமையலில் நல்ல எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தினால் உடலுக்கு நல்லது.

19. சாம்பாரில் பருப்பை சேர்க்கும் போதுநன்கு கொதிக்க விட்டு இறக்கினால் அதிக நேரம் கெடாது.

20. காய்களை எண்ணெயில் 1 நிமிடம் வதக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும்.விரைவில் வெந்துவிடும்.

21. ரசத்திற்க்கு பருப்பு தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இற்க்கி 1 ஸ்பூன் நெய்யில் கடுகு, மிளகு, சீரக பொடி, கடா பெருங்காயம் பொடித்துபோட்டால் மணமாக இருக்கும்.

22. தேங்காய் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு இறக்கும் போதுதான் பால் ஊற்ற வேண்டும் இல்லையெனில் பால் திரிந்துவிடும்.

23. அல்வா செய்யும் சமயம் பதம் தவறி நீர்த்துவிட்டால் கார்ன் ஃப்ளார் மாவை தேவையான அளவு சேர்த்துபின், [அதற்கு தகுந்த சர்க்கரைபோடவும்] ஆறியபின் விரைவில் கெட்டியாகிவிடும். அல்வாவும் மினுமினுப்பாக, சுவையாக இருக்கும்.

24. குலோப்ஜாமூன் செய்ய சர்க்கரை பாகில் எலுமிச்சை சாறு 5 சொட்டுகள் விட்டால் பாகு இளகியே இருக்கும்.

25. ரவா கேசரி செய்யும் சமயம் நீர்த்து விட்டால், அதை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு கோதுமை மாவு கொஞ்சம் எடுத்து வறுத்து போட்டால் கெட்டியாகிவிடும். 2 ஸ்பூன் நெய்விட்டால் சூப்பராக இரூக்கும்.

ஆரோக்கியம் காக்க


1. முருங்கைக்கீரை: வைட்டமின், ஏ, பி, சி, இரும்பு சத்து, 2 வாரத்துக்கு 1 முறை யாவது சாப்பிட்டால் மலகுடல்களில் சேரும் பூச்சிகள் வெளியேறும்.ஜீரண சக்தி குறைந்தவர்கள் [மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி] சாப்பிடலாம். கண் பார்வைக்கு நல்லது.

2. சிறுகீரை: இதில் கால்சியம் உள்ளது. அனைவருமே சாப்பிடலாம். மற்ற மருந்துகள் சாப்பிட்டு கொண்டு உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் படிசாப்பிடலாம். நீரழிவு நோய் உள்ளவ்ர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.

3. மணத்தக்காளி: இதில் வைட்டமின் ஏ, பி, அதிக அளவில் உள்ளது. வயிற்றில் புண்,வாயில் புண் உள்ளவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணம் தெரியும். உடலின் சூட்டை தணித்து, உடலின் உள் உறுப்புகளில் புண் இருந்தால் அடிக்கடி சாப்பிட்டால் நன்கு குணம் அடையும். வயிற்றில் பூச்சிகள் வராது தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்குமட்டும்தான் உண்டு.

4. கேரட்: இதில் விட்டமின் ஏ, நிறைய உள்ளது. கார்போஹைட்ரேட், தாது உப்புகள் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. தினமும் 1 டம்ளர் கேரட் ஜுஸ் இடிக்கலாம். சர்ககரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. தினமும் 2 கேரட் சாப்பிட்டால் உடல் வெயிட் போடாது. கேரட் சூப் வைத்து குடிக்கும்போது மிளகு,சீரகதூள் சேருவதால் உடல் கழிவுகள் வெளியேறும்.

5. சுண்டைக்காய்: இதை எல்லோருமே சாப்பிடலாம். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட மூச்சு திணறல் குறையும். இதில் விட்டமின் சி, உள்ளது. வயிற்றில் சேரும் கிருமிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல்திறன்கூடும். சளியை கரைக்கும். இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, விட்டமின் ஏ, இந்த கீரையை எல்லோரும் சாப்பிடலாம். மூல சூடு உள்ளவர்கள், அதிக வெள்ளை பாடு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 1 கப் சாப்பிடலாம். உடல் சூட்டை தணித்து உடலுக்கு வலிமை தரும்.

6. முடக்கத்தான் கீரையில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களுக்கு வலு தரும். வாயு, வாதத்தினால் வரும் வாத வீக்கம்,வலி, குடைச்சல் இவற்றை போக்கும்.

7. வெண்டைக்காயில் பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி, சி, கொஞ்சம் அயன் சத்து. எலும்புகளுக்கு பலம் தரும். மூளைக்கு நல்லது. ஞாபக சக்தியை தூண்டும்.

8. பாகற்காயில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் பாலிபெப்டுடைட் என்ற வேதிபொருள் நிறைய உள்ளது. சர்க்கரை உள்ளவர்கள் தினமும் சாப்பிட நல்லது. தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும். வேறு உபாதைகளுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் கேட்டு சாப்பிடவேண்டும். ஏனெனில் அந்த மருந்தின் வீரியத்தை முறியடிக்கும்.

டிப்ஸ்


1. தோசை மாவு குறைவாக இருந்தால் தேவையான சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இருக்கும் மாவையும் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்துவிடும். அதில் தோசை வார்த்தால் நன்கு முறுகலான தோசை வரும்.

2. கொழுக்கட்டைக்கு மாவுக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் கொழுக்கட்டை விரியாமல் அழகாக வரும்.

3. சாம்பாரில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் 4 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இல்லையெனில் கொஞ்சம் தேங்காயுடன் 1 ஸ்பூன் மல்லி[ தனியாவை] மிக்ஸியில் அரைத்து கலந்தாலும் உப்பு குறையும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு சாம்பாரில் போடலாம். பரிமாறும் சமயம் உப்பு அதிகம் இருந்தால் உடனே ஒரு கப் பால் கலந்து பரிமாறவும். ஆனால் பால் கலப்பதால் இந்த சாம்பாரை உடனே சாப்பிட்டுடனும். அதிக நேரம் இருந்தால் கெட்டு விடும். அதனால் பரிமாறும் அளவுக்கு சாம்பாரில் பால் கலந்து கொள்ளலாம்.

4. சாதம் குழைவாக வேண்டும் என்று விரும்பினால அரிசியை 1 மணி நேரம் முன்பாகவே நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு 1பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கலாம். உதிராக வேண்டும் எனில் 1பங்கு அரிசிக்கு 2/12 அளவு தண்ணீர் சேர்க்கலாம். அரிசி ஊறுவதால சாதம் குழையாது. உதிராகவும் இருக்கும். சாப்டாகவும் இருக்கும்.

5. உளுந்து வடை செய்யும் போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் தேவையான அளவு அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கலந்து வடை தட்டவும். உப்பு போட மறக்க வேண்டாம்.

6. பாகற்க்காய் பொரியலுக்கு [ கசப்பு சுவை பிடிக்காதவர்கள்] நறுக்கி கொஞ்ச மஞ்சள்பொடி, உப்பு, புளிசாறு [அ] 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஊறவைத்து 1/2 மணி நேரம் கழித்து பொரியலோ, அதில் எது செய்தாலும் கசக்காது.

7. சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவை வறுத்து அதிகமான தண்ணீர் ஊற்றி பாதி வேகும் சமயம் அடுப்பை அணைத்து குளிர்ந்த தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கலந்து வடிக்கவிட்டு செய்தால பாயசம் குழையாமல் சேமியாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சேமியா பாயசம் சூப்பராக இருக்கும்.

8. சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு கிரேவி செய்தால் முதலில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு கரைந்து பொன்கலரில் வரும் போது தக்காளி, வெங்காயம் என்று அவரவர் செய்யும்படி செய்யவும். இப்படி செய்யும்போது கலரும் வரும். டேஸ்டும் சூப்பராக இருக்கும்.

9. வெண்டைக்காயை பொரியல் செய்ய சிறிது நேரம் முன்பாகவே நறுக்கி தட்டில் பரப்பி ஃபிரிஜ்ஜில், [அ] வெயில் இருந்தால் கொஞ்ச நேரம் வைத்து பொரியல் செய்தால் சீக்கிரமும் வதங்கிடும். எண்ணெயும் குறைவாக ஆகும். வழுவழுப்பும் இருக்காது.

10. பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் குறுனையாக உடைத்து குக்கரில் பாலும் தண்ணீரும் கலந்து நன்கு வேகவிட்டு, வெந்தபின் மேலும் பால் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

11. குருமா, பிரியாணிக்கு முதலில் வாசனை பொருட்களை போட்டு, வெங்காயத்தை சேர்த்து வதங்கியபின் பூண்டை சேர்த்து வதக்கினால் வாசனை நன்றாக இருக்கும். முதலிலேயே பூண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்து கருகிவிடும்.

12. பஜ்ஜி செய்யும் போது கடலைமாவு- 1 கப், அரிசி மாவு- 1/2 கப், பொட்டுகடலை மாவு- 1/2 கப் அளவில் போட்டு நன்கு தேவையான ஊப்பு, மிளகாய் பொடி,பெருங்காய பொடி, தேவையான தண்ணீர் கலந்து பஜ்ஜி செய்தால் நன்கு உப்பி வரும்.

13. பயறுகள், பருப்புகளை ஊற விடும் போது 2 முறை நன்கு கழுவிய பின் ஊற வைக்கவும். வேகவிடும்போது அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரில் வேக வைக்கவும். 
 

டிப்ஸ்


  1. அவசரமாக ரசம் செய்ய வேண்டுமா 2 நபர்க்கு- மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1ஸ்பூன், தனியா - 1 ஸ்பூன், வரமிளகாய் - 3 புளி எலுமிச்சை அளவு. உப்பு தேவையானது.கடுகு- தாளிக்க கொஞ்சம், மஞ்சள்பொடி - கொஞ்சம், பெருங்காயம் - கொஞ்சம். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, மிளகாய், புளியை லேசாக சூடு செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிவந்த பின் , நன்கு ஆறியபின் உப்பு போட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டபின், வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, மஞ்சள்பொடி, பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தபின் இறக்கி கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால் சூப்பரான ரசம் ரெடி. நெய்யில் தாளித்தால் ரசம் சூப்பராக இருக்கும்.
     
  2. சட்னி செய்ய பருப்புகள் இல்லையெனில் கவலை வேண்டாம். தக்காளி சட்னி செய்ய வேண்டும் எனில் தக்காளி, வெங்காயம்[ சிறிய, பெரிய] எதுவாக இருந்தாலும் சரி, லேசாக வதக்கி ஆறியபின் இட்லி பொடி இருந்தால் 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு போட்டு காரம் அதிகம் தேவைஎனில் வரமிளகாய் [அ] பச்சைமிளகாய் சேர்த்து அத்துடன் தேங்காய் இருந்தால் 2 ஸ்பூன் போடலாம் இல்லையெனில் தேவையில்லை. உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைத்தால் சட்னி தயார். இதில் சிறிய துண்டு பீட்ரூட், கேரட், பொடியாக நறுக்கி போட்டு வதக்கினால் காய்கறி சட்னி தயார். சாப்பாட்டுக்கு தேவை எனில் கொஞ்சம் புளி சேர்த்து அரைக்க வேண்டும்.டிபனுக்கு எனில் புளி வேண்டாம்.
     
  3. ரவை - 1 கப் எனில், அரிசி மாவு- 1/4 கப், பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு பெரியவெங்காயம் - 1 பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்து , உப்பும் சேர்த்து கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்தால் பொன் நிறமாக இருக்கும்.மொறு, மொறுப்பாகவும் இருக்கும். தொட்டு கொள்ள தயிரில் கடுகு தாளித்து சாப்பிடலாம்.
     
  4. கத்தரிக்காய் பச்சடி செய்ய கொஞ்சம் வாணலியில் எண்ணெய் ( 1 ஸ்பூன்) எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு மூடி வைத்தால் சீக்கிரம் வதங்கி விடும்.இப்படி செய்தாலும் சுட்ட வாசனை இருக்கும். ஆறிய பின் எடுத்து தோல் உரித்து கையினால் மசித்து கொண்டு எண்ணெயில் கடுகு,பெருங்காயம் 4 -வரமிளகாய் தாளித்து 100 கிராம் தயிரில் போட்டு, அதில் கத்தரிக்காயை கலந்தால் பச்சடி தயார்.இதுபோல் எந்த காய்களிலும் செய்யலாம். காய்களை வதக்கனும் அப்போதுதான் பச்சடியின் வாசனை வரும்.
     
  5. முதல் நாள் இரவு வைத்த சாதம் எனில் காலையில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம்,வறுப்பட்டபின் பெரியவெங்காயம் -2 பச்சைமிளகாய் 4 (அ) வரமிளகாய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை பொடியாக நறுக்கி போட்டு தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் எரியவிட்டு சாதத்தை போட்டு வதக்கினால் வெங்காய சாதம் ரெடி. சூப்பராக இருக்கும். தேவை எனில் குடமிளகாயை பொடியாக நறுக்கி போட்டு கலக்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு சாப்பிடலாம்.எதுவுமே அவசரத்துக்கு இல்லையெனில் கொஞ்சம் மிளகு, சீரகத்தை பொடிசெய்து சாதத்தில் கலந்து வதக்கலாம்.
     
  6. பீர்க்கங்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய்சேர்த்து வதக்கி உப்பு போட்டு தயிரில் கலந்தால், பீர்க்கங்காய் தயிர் பச்சடி தயார்.

    4 comments:

    1. சூப்பர் .... சூப்பர்.....

      நன்றி.....நன்றி

      ReplyDelete
    2. கடையில் கிடைக்கும் தோசைபோல் தோசை செய்ய என்ன மாவு கலக்கவேண்டும்

      ReplyDelete