Friday, September 16, 2011

அறியாமை

இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?

எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!

தனி ஒரு மனிதனின் சுய பிரச்சினைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரச்சினைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக ஒன்று திரள மறுக்கிறார்கள். அறியாமையால் தான் வாழ்நாள் முழுவதும் காட்டிலும் பாலைவனத்திலும் அலைந்து திரிந்து, சாகும்போது கூட சபிக்கப்பட்டவர்களாய் சாகிறார்கள் தீவிரவாதிகள்.

அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம்.

எது சரி? எது தவறு? எனக்கு சரி என படுவது மற்றவனுக்கு தவறாக படுகிறது. மற்றவனுக்கு சரியாகப்படுவது எனக்கு தவறாகபடுகிறது. இப்படியிருக்கும் இந்த யுகத்தில் எப்படி பிரச்சினைகளை சரி, தவறு என தீர்மானிப்பது. அழிவை விரும்பாத ஒவ்வொரு மனங்களும் கேட்கும் கேள்விகள் இவை.

தர்மத்தின் வாழ்வுதனை ஏன் சூது கவ்வ வேண்டும்? - இது ஒவ்வொரு எதார்த்த மனங்களிலும் இருக்கும் உச்ச

கேள்வி.

முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மரணத்தை தாண்டியும், வாழ்க்கை விதிகளை வகுத்துவைத்துள்ள ஆன்மீகவாதிகளின் அடக்குமுறை ஒருபுறம். பிரபஞ்சம், பால்வெளி, பெரும்வெடிப்பு, சூரியன் அழியும், பூமி பிரளும் என புதுப்புது அர்த்தங்களை கூறும் அறிவியலின் அச்சுறுத்தல் ஒருபுறம். ஆன்மீகமும் அறிவியலும் என்னென்னமோ சொன்னாலும் எதார்த்தத்திற்கும் நடைமுறை அரசியலுக்குமுள்ள தடுமாற்றங்கள் மறுபுறம். இத்தனை அறியாமைகளும் ஒன்றுசேர்ந்து நெருக்கும்போது எப்படி மனிதமனதுள் பொறுப்புணர்ச்சி வரும்?

கடவுள் இருக்கிறாரா? என்னை கண்காணிக்கிறாரா? புனிதயுத்தம் கடவுளின் கட்டளையா? தர்மயுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது குற்றமா? அல்லது ஈடுபடுவது குற்றமா? வேதங்கள் தான் வாழ்க்கையின் நிர்ணயிககப்பட்ட சட்டங்களா? இயேசு கிறிஸ்துவா, அல்லாவா, இந்துத்துவ கடவுள்களா? அல்லது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவரா?

யார் கடவுள், எந்த சக்தி கடவுளின் விதி? எது கடவுளின் வழி? அல்லது கடவுளே இல்லையா? எதை நான் பின்பற்றுவது? எது பாவம்? எது புண்ணியம்? இந்த உலகம் அழிவுக்காக படைக்கப் பட்டதா? இந்த உலகை தாண்டிய சொர்க்கலோகம் உண்டா? பிரபஞ்சம் வெடித்து சிதறிவிடுமா? நிச்சயமற்ற இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்வரை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டால் தான் என்ன? - இப்படி மனதுக்குள் தெளிவு இல்லாத மக்களுக்கு எப்படி, அலட்சியம் அகன்று விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் வரும்?

அறியாமைகள் அகன்று அறிவுத்தெளிவு வராதவரை நல்லெண்ணவாத மக்கள் பொது பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள். மதத்தின் பேரில் பிரச்சினையா அதை பற்றி எனக்கு தெரியாது, எனவே அதை தடுக்கவோ தீர்க்கவோ நான் முயல்வது சரிப்பட்டு வராது. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளிலும் நல்லெண்ணவாத மக்கள் ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள்.

விளைவு என்ன?

அநீதிகளும், சுயநலபோகங்களும் அசுரவேகத்தில் பெருகி, இன்று உலகே பேரழிவுக் கிடங்காகிக் கிடக்கிறது. அறியாமைகள் அகல வேண்டும் அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். அறியாமைகள் அகலாமல் மனித குலத்தின் எந்த பிரச்சினைகளும் தீராது. தீர்க்கவும் முடியாது. முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?

எதனால் இந்த கொடூரம் நிகழ்ந்தது?

அவர்கள் நல்லதை விதைக்க ஏன் பலமடங்கு தீமைகள் விளைந்தது? மனித குலத்துள் பிரச்சினைகள் உதித்த காலம் தொட்டு தீர்வுகள் சொல்லிச்சொல்லி தலைமுறை தோறும் ஞானிகளும், மகான்களும் உதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இத்துனை மகான்களும் ஞானிகளும் போதித்தும் மனிதகுல பிரச்சினைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லையே ஏன்?

மனிதகுல பிரச்சினைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலவே அகலாதா? அறியாமைகள் அகன்று அலட்சியப் போக்கு மாறி, பிரச்சினைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும், புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? - இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.

எதார்த்த சிந்தனையோடேயே தொடர்ந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் அறியாமைகளுக்கும், பிரட்சனைகளுக்கும், முற்றுபுள்ளி வைக்கலாம் அல்லவா?

No comments:

Post a Comment