Showing posts with label சி.ஜெயபரதன் அறிவியலார். Show all posts
Showing posts with label சி.ஜெயபரதன் அறிவியலார். Show all posts

Monday, September 12, 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(2)-ஈரோடு மாவட்டம்.


அன்பு நண்பர்களே,வணக்கம்.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் மரியாதைக்குரிய அறிவியல் அறிஞர் திரு;சி.ஜெயபாரதன் ஐயா அவர்களின் அறிமுகம் காணீர்!.


ஐயா- சி.ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் வழித் தகவல் கீழே,

நண்பர் பரமேஸ்வரன்,

வணக்கம்.   உங்கள் வலைத் தளத்தில் பேரழிவுப் போராயுதங்களைப் பற்றித் தமிழில் பொதுநபருக்கு விளக்கி இருக்கும் விதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  எனது வலைத் தளத்தில் http://jayabarathan.wordpress.com/  அணுசக்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் உள்ளன.   தேவையானவற்றை எடுத்தாளுங்கள்.

பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++
  அறிவியலார் மரியாதைக்குரிய ஐயா= சி.ஜெயபாரதன், அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் கீழே படியுங்கள்.
       
சி.ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கிறேன் விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறன் ஊட்ட வா.
போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனை ஆக்கு !

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.  இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி.  இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

 மதிப்பிற்குரிய ஐயா,சி.ஜெயபாரதன்  அவர்களின் தந்தையார் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவருக்கும் நமது வீர வணக்கம்.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர்.  ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப்  பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
    சி.ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.