Tuesday, April 5, 2016

சாலையில் கவனம் சகலருக்கும் அவசியம்.

சிந்தியுங்க!
                     சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

09 மார்ச் 2016 தேதியன்று கோபிசெட்டிபாளையத்தில்  பயணிகள் ஆட்டோவில் பயணித்தபோது சந்தித்த விபத்து..... 
 மறுநாள் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்  வெளிவந்த செய்தி.
 
மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். 
           கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டி பொதுச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் கடந்த பிறகும்  வாகனங்களின் போக்குவரத்து தொடர்கிறதா? என கவனிக்கத் தவறியது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் தொடர்ந்து  வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும்
 
                   சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது. 
 
        இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன், பணிக்கு செல்லமுடியாமலும்,உடல்வலி,மன வேதனை,எனக்கு தலைக்காயம் மற்றும் தலையில் மொக்கை அடி,இடுப்பில் மொக்கை அடி,வலது கை ஆட்டோவின் அடியில் சிக்கி மொக்க அடி இவ்வாறாக அடிபட்ட நான் முதலில்  கோபி அபி Ortho மருத்துவமனை, பிறகு பவானி லோகநாதன் Ortho மருத்துவமனை,சத்தி பேருந்து நிலையம் எதிரிலுள்ள செல்வக்குமார் Ortho மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை ஒரு மாதகாலமாகப் பெற்றும் இதனால் காலவிரயம்,செலவுகளால் பொருளாதாரம் இழப்பு,எனது குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் நேர இழப்பும்,வேதனையும் ஏற்பட்டுள்ளன.சமூகப்பணியும் தடைபட்டு விட்டன.
  என் உறவினருக்கு இருபக்க தோள்பட்டை காரை எழும்புகளும் உடைந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கைகளை அசைக்கமுடியாமல் படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். அடிபட்ட சைக்கிளோட்டி இறந்துவிட்டதாக தகவல்.


               நாங்கள் பயணித்தது பயணிகள் ஆட்டோ அதுவும் பயணிகளான நாங்கள் மூன்று பேர் மட்டுமே.நேரான பொதுச்சாலையில் அதிகாலையில் 5.45மணியளவில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் பயணிக்கும்போது  அதுவும் பயணிக்கவேண்டிய  இரண்டு கிலோமீட்டர் மொத்த தூரத்திற்கு பொதுவாக அனைவரும் செல்லும் வேகத்தில் ஆட்டோவும் சென்றது இயல்பானதுதாங்க.சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

  கணப்பொழுதில் சைக்கிள்மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் அமைந்திருந்த கறிக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு டி.வி.எஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி ?!?!?!?!??!?!??!?!!?........மிக மோசமான விபத்தாக நிகழ்ந்தது.எங்களுக்கு உதவி செய்த  அந்த கறிக்கடை உரிமையாளர் (ஞாயிற்றுக்கிழமையல்லவா!) மற்றும்  கறிக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத்தாங்க தெரியும் அந்த விபத்தின் கொடுமை பற்றி.......
 
 
2016எப்ரல் 6 ந் தேதி இன்று உடல் தேறியுள்ளதால் பணிக்கு செல்கிறேன்.
 
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு என் மீது அக்கறைகொண்டுமுகநூல் தளத்திலும்,தொலைபேசியிலும்,நேரிலும் உடல் நலம் விசாரித்தும்,நான் பூரண நலமடையவேண்டி பிரார்த்தனை செய்தும் எனக்காக தங்கள் நேரத்தையும்,எண்ணங்களையும்,நோக்கங்களையும் செலவிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,என் வாழ்நாள் நன்றிங்க...
என்றும் சமூக நலப்பணியில்,
 அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733  paramesdriver@gmail.com
அரசுப்பேருந்து ஓட்டுநர், 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
தாளவாடி கிளை,
 ஈரோடு மண்டலம்.