Tuesday, May 31, 2011

(20) குடும்பத்துடன் இன்ப சுற்றுலா

        சுற்றுலா  பயண தூரம்

                       சத்தி - திருப்பூர்     56 கி.மீ.                

                     திருப்பூர் -மதுரை    176 கி.மீ.
                                          
                     மதுரை -இராமேஸ்வரம்  176 கி.மீ.

                    மதுரை - திருச்செந்தூர்  200 கி.மீ.

                    மதுரை  -   திருநெல்வேலி  118 கி.மீ.

                  இராமேஸ்வரம் -திருச்செந்தூர்  300 கி.மீ.

                திருச்செந்தூர் -கன்யாகுமரி  118 கி.மீ.

               கன்யாகுமரி -  திருநெல்வேலி  101 கி.மீ.அன்பு நண்பர்களே,வணக்கம்.

                             நமக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நம்மையே நம்பி வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நமது முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடும் அவர்களுக்கும் மன நிறைவினைக் கொடுக்கும் வகையில் வருடம் ஒருமுறையாவது நம் பொருளாதாரத்திற்கேற்றவாறு,சூழ்நிலைக்கேற்றவாறு ஒருநாள் முதல் அதற்கு மேல் உங்களது விருப்பத்திற்கேற்றவாறு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். நாங்கள் சென்ற சுற்றுலா விபரம்;

                               நான் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவோ நெருக்கடிகள் உள்ளன. இருப்பினும் வருடம் இருமுறையாவது உள்ளூர் சுற்றுலாவாவது சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
       அதேபோல இந்தமுறை திருச்செந்தூர்,கன்யாகுமரி செல்ல திட்டமிட்டோம். (எங்களது குடும்பத்தில் மூன்று நபர்,அண்ணன் மகள்,மருமகன்,பேத்தி என அவர்கள் மூன்று நபர்கள்,உறவினர் ஏழு நபர்கள் ஆக ஆண்கள் ஐந்து பேர்+ பெண்கள் ஆறு பேர்+சிறுமி ஒருவர் என பதிமூன்று பேர் ) அதன்படி 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சத்தி பஸ்நிலையத்தில் 06.45மணிக்கு குடும்பத்துடன் தேவையான பொருட்களுடன் புறப்பட்டோம்.திருப்பூர் சென்று அங்கு எங்களது சுற்றத்தாரையும் சேர்த்துக்கொண்டு ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில்09.00(இரவு )மணிக்குப் புறப்பட்டோம்.திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் 25-05-2011 புதன்கிழமை அதிகாலை 05.00 மணிக்கு சென்றடைந்தோம். அங்கு அதிகக் கூட்டம் காரணமாக தங்க இடம் கிடைக்காத காரணத்தால் லாக்கரில் எங்களது பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு கடலில் நன்கு அதாவது இரண்டு மணி நேரம் எனது பேத்தி (மைதிலி) எட்டு வயது சிறுமி திருப்தி ஆகும் வரை ஆடிவிட்டு நாழிக்கிணறு சென்று அங்கு நல்லதண்ணீர்க் குளியல் கட்டணம் ரூ=01.00 நபருக்கு என்ற வீதத்தில் கொடுத்துக் குளித்தோம்.அங்கேயே துணிகளை மாற்றிக் கொண்டு கோவிலில் உள்ள வள்ளி குகையில் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி வந்து வரிசையில் நின்று சுமார் இரண்டு மணி நேரம் காத்து முருகப் பெருமானைத் தரிசித்தோம்.அதன்பிறகு அங்கிருந்து கன்யாகுமரி செல்ல பேருந்து நேரம் விசாரித்து மதியம்12.25 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்தோம்.அப்பேருந்து கன்யாகுமரி பஸ்நிலையம் மாலை04.30 மணிக்குச் சென்றடைந்தது.பேருந்து நிலையத்தினுள்ளேயே உள்ள தங்கும் விடுதியில் ஆறாம் எண் அறை எடுத்தோம்.அங்குள்ள அனைத்து நபர்களும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க எங்களுக்கு மிக உதவியாக இருந்தது.அடுத்த நாள்26-05-2011 அன்று காலை அங்கு தினசரி இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக ஒரு நாள் இயற்கையைக் கண்டுகளிக்கும் இன்பச்சுற்றுலா பேருந்தில் ஒரு நபருக்குக்கட்டணம் ரூ=200=00 வீதம் கொடுத்து பயணித்தோம்.அப்பேருந்தானது காலை 07-00 மணிக்கு தினசரி இயங்குகிறது.

Friday, May 13, 2011

(19) தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

 
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்டம்           TNSF


    
                       

   அன்பு நண்பர்களே,
            paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                   
                     தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் தாலூக்கா  தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைக்கிராமம்-  கெத்தேசால் வனப்பகுதியில்அமைந்துள்ள அரசு உண்டிஉறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கி மூன்று நாட்கள்'' புத்தக வாசிப்பு முகாம்''  இந்த மாதம் 14 &  15 மற்றும் 16 -ந் தேதிகளில் நடத்தப்பட்டது.அது சமயம் 
                                        திரு; கமலாயன்,எழுத்தாளர் அவர்கள்.
(1)திரு.பேரா.ந.மணி(முனைவர்) அவர்கள்(உரையாற்றுபவர்)
(2)திரு;முகம்மது அலி (காட்டுயிர் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் இயற்கை ஆர்வலர்)அவர்கள் (அமர்ந்திருப்பவர்)
இந்த புத்தக வாசிப்பு முகாமில் பாரதி புத்தகாலயம் திரு; நாகராஜ் அவர்கள், எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான திரு; கமலாயன் அவர்கள், திரு;ஷாஜகான் அவர்கள்,திரு; ச. தமிழ் செல்வன் அவர்கள், இயற்கைஆர்வலர்- திரு முகமது அலி அவர்கள்,கல்வியாளர்கள் திரு; பேரா. ராஜு அவர்கள், திரு;விஜயகுமார் அவர்கள், மரியாதைக்குரிய,பேரா. மோகனா அம்மையார் மற்றும் சுடர் நடராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள்,உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனைவர்;பேரா. மணி(ஒருங்கிணைப்பு)-( ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்து இருந்தார்.
குழந்தைகளுக்கான புத்தகங்களான,(1)முதல் ஆசிரியர், (2)வாசித்தாலும் வாசித்தாலும்தீராதபுத்தகம்(இயற்கையைநேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக), (4)எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க(ஷாஜகான்) 
(5)பள்ளிக் கூட தேர்தல், (6)டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), (7)ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. போன்ற புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன.(ஆய்வும் செய்து மதிப்பீடும்செய்யப்பட்டது.) இதில் குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், குழந்தைச் செல்வங்களிடம்  அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல், குழந்தைகளின் தேடல், அறிவு போன்றவற்றை தெரிந்து செயலாற்றுவது சம்பந்தமாக ஆசிரியர்கள் அறிந்துகொள்ள  இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

      
வாசிப்பு முகாமில்  74 நண்பர்கள் பங்கேற்றனர்.    இந்த  வாசிப்பு முகாமில் பங்கேற்றவர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள் (பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள்.) அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர், ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம்பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். 
  
  
    இந்த முகாமில் பங்கேற்றவர்களில் ஒருவர் ஆந்திரா எல்லைப் பகுதியிலிருந்து வந்திருந்தார். அவருக்கு  23 வயதுவரைஎழுதப் படிக்கத் தெரியாதாம்.ஆனால் இன்று முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார்.
        
       தரும்புரி பகுதியிலிருந்து பணி ஓய்வு பெற்ற வனத்துறை நண்பர் வருகை தந்நிருந்தார். அவரது செயல்பாடு மிகவும் வித்தியாசமாக வியக்கத்தக்க வகையில் அமைந்தது.
  அவர் மூன்று காமெராக்களை வைத்துக்கொண்டு வனப்பகுதியில்உள்ளபூச்சியினங்கள்,விலங்கினங்கள்,தாவரங்கள்,ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து அவ்வப்போது உடன் கொண்டு வந்திருந்த லேப்-டாப் கணிணியில் பதிவு செய்து அங்குள்ளோருக்கு வினியோகம் செய்தார்.
  
    சத்தியமங்கலம்  சுடர்  செயலாளர் திரு; நடராஜ் அவர்கள் மூன்று நாட்களுக்கான சாப்பாடு மற்றும் தங்குவதற்கான ஏற்பாட்டினை செய்து உதவினார்.
   
     சத்தியிலிருந்து கெத்தேசால் சென்று வர சத்தியமங்கலம்  ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளர் மரியாதைக்குரிய செல்வம் அவர்கள் இரண்டு ஓட்டுனர்களுடன் ஒரு பள்ளிப் பேருந்தினைக் கொடுத்து உதவினார்.
 வீட்டிற்குள் ஒரு பள்ளிக்கூடம்; பள்ளிக்கூடத்திற்குள் ஒரு வீடு, என குழந்தைகளோடு சுதந்திரமாக இருக்க வேண்டும்.என்பது உட்பட பல அறிவுரைகள் அங்கு முன் வைத்து விவாதிக்கப்பட்டன. 

    கற்றலில் சிறந்த கற்றல் கற்பிப்பது எப்படி என்று கற்றலே ஆகும், என்பது உட்பட இலகுவாக மாணவர்களோடு ஒன்றி கல்விப்பணி ஆற்றுவது குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
  அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது.

 paramesdriver.blogspot.com -Sathy & Thalavadi

            

Thursday, May 5, 2011

(18)வாகனம் ஓட்டும் கலை

               பாதுகாப்பாக, தற்காப்புடன் வாகனம்   ஓட்டுவது எப்படி?

அன்பு நண்பர்களே,வணக்கம்.

                   இணையத்திலும் சரி,வலைப்பதிவுகளிலும் சரி,

       வாகனம் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும்  கலை, பாதுகாப்பான பயணம் , போக்குவரத்துச் சின்னங்கள்,போன்ற மோட்டார் வாகனம் பற்றிய பதிவுகள்

           எளிமையாக,விளக்கமாக தமிழில் பதிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

         எனவே,எனது அனுபவங்கள், பிற அனுபவசாலிகள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள்,மற்றும் நான் சார்ந்துள்ள அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சியாளர்கள்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,காவல் துறை அதிகாரிகள் 

          ஆகிய வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை நண்பர்களிடமும் அனைத்து விபரங்களும் முடிந்தவரை தகவல்கள் சேகரிக்கப்பட்டு சமூக நலன் கருதி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.

             அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறேன். என,,,,,,,,,,

                  பரமேஸ் டிரைவர்-சத்தியமங்கலம்