Tuesday, December 30, 2014

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடவுளா?மந்திரவாதிகளா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.28.12.2014 ஞாயிறு முதல் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கான காரணங்களில் சில தங்களது பார்வைக்காக..
ஓட்டுநர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி பற்றி பார்ப்போம்.
            (1) பேருந்து வாகன உற்பத்தியாளர்களுக்கே புதிய பேருந்து ஒருலிட்டர் டீசல் செலவழித்தால் எத்தனை கிலோமீட்டர் ஓடும்
என்று கூறத்தெரியாத நிலையில்
(டீசலிலும் மூன்று வகையான தரம் உள்ளன.அவற்றில் எந்த தரமுள்ள டீசல் கழகத்தில் உபயோகம் எனத்தெரியாது)   
          ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து வழித்தடத்தில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்யாத நிலையில் பணியிலிருக்கும் ஓட்டுநர்களே  பழைய பேருந்துகளில்,அதிக பயணிகளை ஏற்றிய நிலையில்,வழித்தடக்குறுக்கீடு,தடைகள்,அதிக நிறுத்தங்கள்,குறைவான பிரேக் என பல்வேறு சிக்கல்களில் பேருந்து பராமரிப்பு குறைந்தநிலையில்,முகப்பு விளக்குகள் வெளிச்சமே இல்லாத இரவு இயக்கத்தில்,வாகன வேகத்தைக் குறைத்துள்ள நிலையில்,இஞ்சின் சக்தியைக் குறைத்துள்ள நிலையில்,தனியார் பேருந்துகளுக்கு இணையாக நிமிட நேர இடைவெளியில் போட்டியிட்டு அதுவும் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி எடுத்து இயக்கி பயணநேரத்தை நிர்வகித்து வரும் சிக்கலான நிலையில் ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இயக்க வேண்டும் என்ற கிளை நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடி?(இதன் விளக்கம் கடைசியில் பதிவிடுகிறேன்.)
            (2)தற்போது ''புதிய தலைமுறை தொலைக்காட்சி''யில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த பேட்டியில் வாகனம் ஓட்ட உரிமம் இருந்தாலே அவர்கள் சிறந்த ஓட்டுநர்கள்தான் அவர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறோம் என்று உரிமம் இருந்தாலே சிறந்த ஓட்டுநர் என்று சான்றளித்துள்ள நிலையில்  தனியார் வாகனங்களிலும்,பல மாநிலங்களுக்கும் ஓட்டும் தொழிலைச்செய்து தற்போது அரசுப் பேருந்து ஓட்டும் என்னைப்போல முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி (உரிமம் எடுத்துள்ள தேதியின்படி) அனுபவம் பெற்று இருந்தும்,எங்களைப்போன்றவர்களை  அப்போதைய பொதுமேலாளர் அவர்கள் சோதனை ஓட்டம் பார்த்து மூன்று மாதங்கள் பவானிசாகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி கொடுத்து பிறகு வாகனம் ஓட்ட அனுமதியளித்துள்ள நிலையில் தற்போது பணிக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள் எங்களைப்பார்த்து ஓட்டுநர் பணிக்கே லாயக்கில்லை? எவனய்யா லைசென்ஸ்கொடுத்தது? யாருய்யா வேலைக்கு சேர்த்தது? என்று கேவலமாகத்திட்டும் அவலநிலை!..
              (3)மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒரு ஷிப்டு பணி புரிந்துவிட்டு விடுப்பு எடு! என்று நிர்ப்பந்தித்து மனித உயிருடன் விளையாடும் ஆபத்தான பணி என்ற உண்மை தெரிந்தும்? மோட்டார் வாகன சட்டத்தையே குழிதோண்டி புதைக்கும் அவலநிலை  அவலநிலை!(உடல்நிலையும்,மனநிலையும் பொறுமை காத்து வேலை செய்யுமோ?)
           (4)அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் தினமும் அனைத்து தொழிலாளர்களுக்கும்  புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதே பயிற்சியாளர்களை ஓட்டுநர் பயிற்றுநர்களை வைத்து வழித்தடங்களில் ஒரு பேருந்தை ஓட்டவைத்து ஒரு லிட்டர் டீசலுக்கு இயக்கும் தூரத்தை நிர்ணயம் செய்யாமல் (வாகன உற்பத்தியாளர்களுக்கே ஒரு லிட்டர் செலவுக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று தெரியாது அதனால் அவர்களை விடுங்க) பாதையின் தன்மை பயணிகளின் ஏறும் மற்றும் இறங்கும் தன்மை  கொள்ளளவுக்கும் அதிகமாக ஏறும் பயணிகளின் ஆரோக்கியம்,மற்றும் நோயாளிகள்,வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,என பயணிகளின் தன்மை பற்றி கவலைப்படாத நிலை,
          (5) வானூர்திக்கு தனிவழி, கப்பலுக்கு தனிவழி, புகைவண்டிக்குக்கூட தனிவழி,ஆனால் சாலைப்போக்குவரத்தில் பேருந்துக்கு மட்டும் பொது வழி?!?...அதாவது பல்வேறு தன்மையுள்ள ,பராமரிப்புள்ள ,ஒரு வாகனம் செல்லும் பாதையில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு எடைகளுள்ள,பல்வேறு வடிங்களுள்ள, பல வாகனங்கள் செல்லும் நிலையில் பல்வேறு மனநிலையிலுள்ள பொதுச்சாலை அனைவருக்கும் சொந்தம் என்று தெரிந்தும் சாலைவிதிகளை அலட்சியம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் பெரும் நிறுவன அதிபர்கள்,பெரும்முதலாளிகள்  போன்ற சொந்த வாகன ஓட்டிகள்,அதிகார வர்க்கம்,உள்ளூர்வாசிகள்,அரசியல்வர்க்கம்,அதிகாரிகளின் தாமதமான தவறான போக்கு,பிற வாகன ஓட்டிகளின் தவறான ஓட்டம் மற்றும் வழிவிடாமல் மெதுவாக நடுப்பாதையில் வாகனம் ஓட்டுவது,(அதாவது பேருந்துஓட்டுநர்களை பழி எடுப்பதாக நினைத்து பேருந்தில் பயணிப்பவர்களை பாதிப்படையச்செய்வது) தற்காலிக குறுக்கீடுகள்,தடைகள்,சாலை ஆக்கிரமிப்புகள்,என எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு இயக்கும் பரிதாப நிலையில் ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு அது என்ன தரம்?என்றும் தெரியாது..வாகன உற்பத்தியாளருக்கும் தெரியாது...ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஒருமுறை ஓட்டி சோதித்தும் டீசல் செலவு நிர்ணயம் செய்யமுடியாது....கண்காணிப்புக்கேமராவும் பொருத்த முடியாது..கடமையாற்றும் நேர்மையான ஓட்டுநர்களையும் தெரியாது...ஏதோ ஒரு கேஸ் எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மலைப்பகுதியில்,அதுவும் இரவு நேரத்தில் போக்குவரத்தே இல்லாத இடத்தில் பேருந்தை சோதிக்கிறேன் என்ற தோற்றத்தில் பொய்யான வழக்கினைப்போட்டு பழிவாங்கும்  படு கேவலமான நிலை..
      (6) ஒரு பேருந்தின் கொள்ளளவு 55 பயணிகள் என்றாலும் சூழ்நிலை காரணமாக 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தினுள் காலியாக இடமே  இல்லாதநிலையில் வழித்தடத்தில் பயணிகளையோ,பள்ளி மாணவர்களையோ ஏற்ற இயலாமல் விட்டுவர வேண்டிய சூழ்நிலையில் ஏற்றி வராமைக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்..இதை எப்படி ஏற்க முடியும்?உண்மைநிலை அறியவேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா?..
           (7)அனுபவமுள்ள மற்றும் ஒழுக்கமான தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காதது...
இன்னும் ஏராளமான பிரச்சினைகளை,நெருக்கடிகளை,பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தித்து.சகித்து.பொறுமையுடன் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற கடமையின் காரணமாக மந்திரவாதிகளாகவும்,கடவுள்போலவும் (கடவுளுக்கு உணர்வு உள்ளதா?) உணர்ச்சியற்று பணி புரியும் நிலை..
இதற்கெல்லாம் தற்போதைக்கு ஒரே வழி.. அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை அதுவும் TWO FACE என்னும் இருமுகமுள்ள கேமராக்களைப்  பொருத்தி பேருந்தின் உள்ளே மற்றும் வெளியே  இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணித்து  உண்மையான நிலை அறிய வேண்டும்.செலவு ஒரே முறை அதுவும் குறைந்து செலவு..தற்போதுள்ள பரிசோதனை முறையால் ஏகப்பட்ட செலவு  அதுவும் ஒரு பேருந்தை சில நிமிடங்கள் மட்டுமே சோதிக்கும் குறைபாடான சோதனை..(செலவு ஒரு அதிகாரிக்கு மாத சம்பளம் ரூபாய் 60,000.00க்கும் மேல். உடன் வரும் பரிசோதகர்கள் இருவருக்கு மாதம் ரூபாய்30,000.00 வீதம் 60000.00 ரூபாய் சம்பளம்,ஜீப் ஓட்டுநருக்கு மாதம் ரூபாய்20000.00 அதுபோக ஜீப் பராமரிப்புக்கான செலவு மற்றும் எரிபொருள் செலவு நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்க இவ்வாறு ஒரு மாதத்திற்கான செலவால் அனைத்து பேருந்துகளுக்கும் கேமரா பொருத்திவிடலாம்..


 சாதாரண டீக்கடையில் கூட கண்காணிப்புக்கேமரா பொருத்தி பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள இன்றைய நிலையில்...பேருந்துகளுக்கும் பொருத்தி  பயணிகளுக்கும்  முழு நேரப் பாதுகாப்பு, பணியிலிருக்கும் தொழிலாளர்களின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிப்பும்  செய்யலாம்...
               இந்த அரசு செய்யுமா???


1 comment:

  1. உங்கள் தரப்பு நியாயங்களை அறிந்தேன்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete