Friday, May 22, 2015

கனரக சரக்கு வாகன பெண் ஓட்டுநர்-2015


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். கனரக வாகன பெண் ஓட்டுநரை வாழ்த்துவோம் வாங்க..
(தி இந்து மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான செய்திகள்)

30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி


பெட்லீ பீட்டர்
ஜோதிமணி | படம்: எம்.கோவர்த்தன்
ஜோதிமணி | படம்: எம்.கோவர்த்தன்

நீங்கள் பெண்கள் சுயமுன்னேற்றத்தைப் பறை சாற்றும் ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படத்தை பார்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்களா? அதே புத்துணர்ச்சியுடன் ஜோதிமணியின் வெற்றியையும் கொண்டாடுங்கள்.
ஆணுக்குப் பெண் சரிசமமாக வேலை செய்தாலும் அவர்களுக்கு சவால்கள் நிறைய இருக்கின்றன. அதுவும் லாரி ஓட்டுநர் என்றால் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.
ஜோதிமணி கவுதமன் (30) தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவர் என்று சொல்லலாம். கனரக வாகனமான லாரியை ஓட்டுவதில் அவர் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அவர் சந்திக்கும் சவால்களும் என்ன?
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருக்கிறது கள்ளிப்பட்டி கிராமம். இதுவே, ஜோதிமணியின் சொந்த கிராமம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா.
16 டன் எடை கொண்ட கனரக வாகனமான லாரியை ஓட்ட எப்படிக் கற்றுக் கொண்டார் ஜோதிமணி.
அவரே சொல்கிறார், "என் கணவர் லாரி ஓட்டுநர். அவருக்கு சொந்தமாக ஒரு லாரி இருந்தது. அவர் பணி முடிந்து வந்த லாரியை வீட்டில் நிறுத்தும் போதெல்லாம். அதை ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதை என் கணவரிடம் சொன்னேன். அவரும் எனக்கு லாரி ஓட்டக் கத்துக் கொடுத்தார். ஆனால், அவர் மிகப் பெரிய பொறுமைசாலி. நான் லாரி ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்ற பெயரில் அங்கும், இங்கும் லாரியை மோத விட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிக நிதானமாக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்தார்.
இப்படி விளையாட்டாக நான் கற்றுக் கொண்டதே என் தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் இரண்டாவதாக ஒரு லாரி வாங்கினோம். அதற்கு ஒரு ஓட்டுநரை பணியமர்த்தினோம். ஆனால், வேலைக்கு குறித்த நேரத்தில் வராமல் பொறுப்பில்லாமல் இருந்தார். இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டது.
எனவே, நானே அந்த லாரியை ஓட்டுவது என்று முடிவு செய்தேன்" என்றார். அப்படித்தான் என் பயணம் தொடங்கியது. (இதை நம்மிடம் சொல்லும்போது அவர் அப்போதுதான் சூரத் பயணத்தை முடித்து திரும்பியிருந்தார்)
2009-ல் தான் முதன்முதலில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி பயணத்தை துவக்கி இருக்கிறார் ஜோதிமணி. அப்போது அவரது கணவர் கவுதமனும் அவருடன் சென்றார். ஆனால், இப்போது அவருக்கு துணைக்கு யாரும் தேவையில்லை. அவரே தனியாக செல்கிறார். குஜராத் வரை செல்கிறார். சில முறை ஒரு வார கால பயணம், சில தருணங்களில் ஒரு மாத காலம் கூட பயணம் நீடிக்கிறது. அப்போதெல்லாம் அவரது பிள்ளைகள் மோனிக் சுபாஷ் (9), விஜயபானு (7) ஆகியோரை அவர்களது பாட்டியே கவனித்துக் கொள்கிறார்.
அவர் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் முழு நேர தொழிலாக உருவெடுத்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. லாரி சக்கரத்தைப் போல் காலச் சக்கரமும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிமணிக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும் இருக்கிறது. அது அசோக் லேலாண்ட் தயாரிப்பு லாரியை ஓட்டுவதில் மட்டும் தன்னால் திறம்பட செயல்பட முடியவில்லை என்பதே அது.
ஒரே ஒரு முறை விபத்தை சந்தித்த அவர் உயிர் பிழைத்த நேரத்தை பயத்துடன் நினைவு கூர்ந்தார். ஆனால், விபத்து அவரை அச்சுறுத்தி முடக்கிவிடவில்லை. இப்போது இன்னமும் திறமையுடன் லாரியை ஓட்டுகிறார்.
அவரது கனவு, சொந்தமாக ஒரு கனரக வாகன போக்குவரத்து ஏஜென்சியை உருவாக்க வேண்டும் என்பதே.
மனைவி, அம்மா, மருமகள், அலுவலக வேலை என பெண்களின் அவதாரங்கள் பற்பல. இதில் பொறுமை, நிதானம், கவனம், விட்டுக்கொடுத்தல், வேதனை, துயரம், அவமானம் என அவள் சந்திக்கும் உணர்வுகள் எண்ணில் அடங்காதவை.
இவற்றுக்கு மத்தியில், அவள் கனவுகள் காணாமல் போகலாம். சுய முன்னேற்றச் சிந்தனைகள் சுவடுகள் தெரியாமல் மாறலாம். ஆனால் அப்படி எல்லாம் நடப்பது இயல்பானது என்பதுபோல் அதற்கு 'தியாகம்' என்று பெயர் வைத்து முத்திரை பதித்துவிடுகிறது சமூகம்.
அத்தகைய சமூகத்தில் ஜோதிமணி 30 வயதினில் அடைந்திருக்கும் இலக்கு பாராட்டுக்குரியதே. அவரது அடுத்த இலக்கு நோக்கி நகரட்டும் லாரியின் சக்கரம்.
© தி இந்து (ஆங்கிலம்) - | தமிழில் சுருக்கமாக பாரதி ஆனந்த்
தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜோதிமணி: தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவரின் வாழ்க்கை பயணம்...


கோவை, மே 19-

தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவர் என்ற பெருமையுடன் தன்னம்பிக்கையின் மறுபெயராக விளங்குகிறார் ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியை சேர்ந்த 30 வயது ஜோதிமணி.

இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிமணி தனது குடும்பத்துக்கு சொந்தமான லாரியில் இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் பாரம் ஏற்றிசெல்கிறார். 2009 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டன்று தனது கணவருக்கு சொந்தமான லாரியை முதன் முதலில் ஓட்ட பயிற்சி எடுத்ததாக கூறிய ஜோதிமணி, தனது ஆர்வத்தை கண்ட கணவரும் அவ்வப்போது லாரியை ஓட்டக்கற்றுக்கொடுத்து வந்தார் என்று மெலிதான சிரிப்புடன் கூறினார்.

தனது சுவையான, சுமையான பயணம் குறித்த அனுபவங்கள் பற்றி ஜோதிமணி மேலும் கூறுகையில்;

இப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்த போது, எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம். இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.

தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்றுவிட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன். ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்று தனது பயணத்தை விவரித்த ஜோதிமணி சில தினங்களுக்கு முன் தான் சூரத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

ஜோதிமணியின் கணவர் கவுதமன் கூறுகையில், ‘‘லாரி டிரைவரான என்னால் தொடர்ந்து இந்த பணியை செய்ய முடியுமோ... என்ற நிலையை மாற்றி எனக்கு தைரிய மூட்டியவர் என் மனைவி ஜோதிமணி. அவரது மன தைரியத்தால் மற்றொரு லாரியை வாங்கினேன் என்னுடன் கிளீனர் வேலைக்கு வந்து எனக்கு ஒத்தாசையாக இருந்த அவர் பிறகு தனியாகவே ஒரு லாரியை ஓட்டி செல்லும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக மாறி விட்டார். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால்  ஜோதிமணி மனைவியாக கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று கூறினார்.

ஜோதிமணியும் அவரது கணவரும் இவ்வாறு வெளியூர்களுக்கு செல்லும்போது, அவர்களின் குழந்தைகளான 9 வயது மோனிக் சுபாஷ் மற்றும் 7 வயது விஜயபானு ஆகியோரை 78 வயதான பாட்டி சரஸ்வதி கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார்.

போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும் என்றும் ஜோதிமணி உறுதிபடுத்தியுள்ளார். அவரது வெற்றிப்பயணம் தொடர நாமும் வாழ்த்துவோமா...

No comments:

Post a Comment