Saturday, April 18, 2015

முதியோர் இல்லம்????.........

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.இவ்வுலகில் அறிமுகமான உனக்கு யார் காரணம்? 
உணர்ந்து விட்டாயா???


(1) வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!


(2) தவமாய் தவமிருந்து,
தன்னை இழக்க துணிந்து,
வரமென வரப்போகும் பிள்ளைக்கு,
கருவறையும் இருள் என யாரோ சொல்ல
கண் மூடாமல் வயிறு தடவி,
தூங்க வைத்த தாய்க்கு எப்படி தெரியும்
பின்னால் நாம் தூங்க போவது
முதியோர் இல்லமென்று...????

மார்பில் எட்டி மிதித்து,
முகத்தில் எச்சில் உமிழ்ந்து,
தோளில் ஆடை நனைத்து,
இது என்ன,அது என்னவென்று
கேள்வி கேட்டு நச்சரிக்கும் போதும்
சிரித்துகொண்டே பதில் சொன்ன
தந்தைக்கு எப்படி தெரியும்
பின்னால் மகன் கேட்க போகும் கேள்விகள்
அவ்வளவு கொடுமையென்று..???

தன் பிள்ளை உண்பதற்காக
உண்ணா நோன்பு கொண்ட
தாய்க்கு எப்படி தெரியும்,
பின்னால் சுவைக்க போகும்
முதியோர் இல்லத்து உணவின் சுவை..???

தன் பிள்ளை நடக்கவும்,
மிதிவண்டி பழகவும்,
நீச்சல் அடிக்கவும்,
கை கொடுத்த தந்தைக்கு எப்படி தெரியும்
பின்னால் நம் கை பிடிக்கபோவது
மரக்கை தானேயன்றி மகன் கையல்ல என்று..??

பிள்ளைகளின் வாழ்வுக்கு
தன் வாழ்வை அர்ப்பணித்த தாயையும்,
பிள்ளைகளின் கனவுக்கு
தன் உயிரில் வெளிச்சம் தந்த தந்தையையும்,
வீடெனும் சொர்க்கத்திலிருந்து
வேறுடன் உயிருடன் பிடுங்கி,
முதியோர் இல்லமெனும் நரகம் தேடி
விதைக்க போகும் ஈரமில்லா பிள்ளைகளே,
ஒன்றை தெளிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கும் முதுமை வருமென்று..!!!

உங்களால் முடியுமெனில் முதியோர்களை
குழந்தை போல் கொஞ்ச வேண்டாம்,
குற்றவாளியாக்கி கொன்று விடாதீர்கள்..!!


(3)இன்றைய சூழ்நிலையில் பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான், அதனால் ஆண் குழந்தையைப் பெருவது பெருமையானது இல்லை என்று தனிமையில் இருக்கும் பொழுது தான் பெற்றோர் உணரத் துவங்கியுள்ளனர். ஆணைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆணைப் பெற்றவர்களிடம் பிறர் மருமகள் சேர்த்துக் கொள்வாளா என்ற எந்த ஒரு கேள்வியும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்க மகன் வீட்டில் இருக்கலாமே ? என்று கேட்பார்கள், அதன் சிக்கல் பெற்றோர்களுக்கு தெரியும் என்பதால் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கவுரவமாக சொல்லிக் கொள்ள முடியும், பெண்ணைப் பெற்றவர்களுக்கு மருமகன் வீட்டில் இருப்பது இழுக்கு என்று நினைத்துக் கொள்வார்கள், மாமனார் மாமியார்களையும் பெற்றோர்களாக நினைத்து கூட வாழ அனுமதிக்கும் மருமகன்கள் இன்றும் குறைவே, இதிலும் யாரையும் குறை சொல்ல முடியாது, வேலை முடிந்து அலுப்புடன் வந்தால் பணி விடை செய்யும் மனைவி இன்று கிடையாது, அவளும் வேலைக்கு சென்று அதே அலுப்புடன் தான் திரும்பி இருப்பாள், இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனைவியையும் வேலைக்கு அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதால் வயதான பெற்றோர்களை உடன் வைத்திருந்தால் கவனிப்பது யார் என்ற கேள்வி, அதைப் புரிந்து கொண்ட பெற்றோர் தனிமையிலேயே வாழ முடிவு செய்துக் கொள்கின்றனர். 

 (4)முகவரி கொடுத்த
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை …
அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான்
அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்
. 

(5) உழைத்து களைத்து
ஓய்ந்து முடங்கிய தேகங்கள்
வலிகள் நிரம்ப கதறுகிறது
முதியோர் இல்லத்தில்
கைப்பிடி சோற்றுக்கு கையேந்தும்
சடமாய் .....

வளர்த்த
குஞ்சுகளின் எலும்புகள்
எட்டி உதைக்கும்படி வலுவானதால்
விரட்டப்பட்டது
வீட்டிலிருந்த தெய்வங்கள்
வீதிக்கு பரதேசியாய் .......

சுமந்த பாவத்துக்காய்
கொடுக்கப்பட்ட சிறையிருப்பை
உடைத்தெறிய வழியின்றி
மகிழ்ந்தபடியே தேம்பி நனைகிறது
சுமைதாங்கியாகவே இருக்கப்பட்டு பழகிப்போன வாழ்க்கை .....

பிள்ளைகளின்
கறிகள் உயிரோடிருந்தும்
வளர்த்தெடுத்த உயிர்கள்
அனாதையாய் வதைப்பட்டு கிழிப்படும்போது
அனல்திரண்ட நெருப்பாய் வெடித்து
தெறிக்கிறது சமூகக்கோபம்...

மொத்த தெம்பையும்
உறிஞ்சு செரித்து
வேண்டாத குப்பையாய்
வீசியெரிந்தப்பின்
விதியில் மிதிபட்டது விரையமானது தியாகம்
பூமிக்கு பாரமென ! .....

இரத்தம் சுண்டி
நாடிதளர்ந்த கிழட்டு பிண்டமாய்
நீதிதேட தெம்பற்று
புதைந்து தொலைகிறது முதியோர் இல்லத்தில்
பிள்ளைகளுக்காய் முகவரிதந்த
பொக்கிசங்கள் .....

நடக்க வலுவற்று
முடங்கி சுருண்ட நேரத்தில்
திட்டலையும் துப்பலையும்
கிரகித்தப்படியே
வெந்து கொப்பளிக்கிறது வயதான மனம்
வாழ்வதைவிட
உயிரை முடக்கிகொள்வது பாக்கியமென்று ......

எரிகிறது
இவர்களின் அடிவயிறு
கைப்பிடி சோறு கிட்டியப்பின்
அடங்கும் பசிக்காய் மட்டுமல்ல
தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளை
தம் பிள்ளையாய் வளர்த்த
பாவத்துக்காய் .....

முதியோர் இல்லத்தை பார்க்கும்போதெல்லாம்
ஞாபகம் கசிகிறது
தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் பற்றியே !


(6)
தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற விவசாய சமூகமாக இருந்தது. அதில் பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்களாக இருந்தன. இத்தகைய கூட்டுக்குடும்ப முறையில் ஒரே குடும்பத்தில் திருமணமான பல பெண்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் முதியோர் பராமரிப்பு என்பது இயல்பாக, எளிதாக இருந்தது என்கிறார் கோவையில் இருக்கும் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர் பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ச அருள்மொழி.
குடும்பநலத்திட்டம் கூட்டுக்குடும்ப சிதைவை வேகப்படுத்தியது
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் சிறுகுடும்பம் என்கிற கருத்தாக்கமும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்கிற வலுவான பிரச்சாரமும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தில் இருபத்திஓராம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பு காணாமல் போய்விட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட பெரிய மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் பராமரிப்பு தேவைப்படும் முதியோரின் எண்ணிக்கை அதிகமாகவும், அவர்களை பராமரிக்க வேண்டிய இளையோரின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் துணைப்பேராசிரியர் விஜயபாஸ்கர், இது முதியோர் பராமரிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
முதியோர் பராமரிப்பிலிருந்து விலகிய பெண்கள்
ஒரு பக்கம், கூட்டுக்குடும்பம் சிறுத்து தனிக்குடும்பமானது மட்டுமல்ல, குடும்பம் என்கிற அமைப்பிற்குள்ளேயே தலைமுறை தலைமுறையாக எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல் முதியோரை முழுநேரமும் பராமரித்துவந்த பெண்கள், அதிலிருந்து விலகவேண்டிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பெண்ணியவாதி ஓவியா.
நன்கு கல்விகற்ற, வேலைக்குப்போய் சம்பாதிக்கக்கூடிய, சுயமரியாதை மிக்க பெண்கள் இனியும் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் முதியோரையும் முழுநேரமும் பராமரிக்கும் தாதிகளாக மட்டும் தொடர்ந்து இருக்கவும் முடியாது; இயங்கவும் முடியாது என்கிறார் ஓவியா.சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம், அந்த குடும்பத்தில் முதியோரை பராமரிப்பதை முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்த பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆகிய காரணங்கள் தவிர, ஒட்டுமொத்த இந்தியாவில் வேகமாக நகர்மயமாகும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் முதியோரின் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்.
அதிகபட்ச நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் பெருமளவு கிராமப்புறம் சார்ந்த விவசாய வருமானமாக இருந்தது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் 8 சதவீதமாக சுருங்கிவிட்டது என்கிறார் விஜயபாஸ்கர்.
இதன் விளைவாக படித்த கிராமப்புற இளம் தலைமுறையினர் விவாசயத்தை விட்டும் கிராமங்களைவிட்டும் நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருப்பதாக கூறுகிறார் பாஸ்கர். இந்த வரலாற்றுப்போக்கின் விளைவாக கிராமங்களில் விடுபட்டுப்போகும் எச்சமாக தொக்கி நிற்கும் முதியவர் நிலைமை மோசமாவதாக கூறுகிறார் முதியவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின் துணை இயக்குநர் ஆர் சுப்பராஜ்.
ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கும் மருத்துவ முன்னேற்றம்.
கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு, குடும்பத்து முதியவர்களை பராமரிப்பதில் குறைந்துவரும் பெண்களின் பங்களிப்பு, வேகமான நகர்மயமாதல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மருத்துவ விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழர்களின் வாழ்நாளை மிகப்பெரிய அளவுக்கு அதிகப்படுத்தியிருப்பதும் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்கிறார் இந்தியாவின் முன்னணி முதியோர் மருத்துவர்களில் ஒருவரான வி எஸ் நடராஜன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகள் என்றிருந்த நிலைமை மாறி, இன்று தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகளைத்தாண்டி வேகமாக உயர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் நடராஜன்.
இப்படி அதிக ஆயுட்காலம் வாழநேரும் முதியவர்களை கையாள்வதற்குத் தேவைப்படும் பக்குவம் இளம்தலைமுறையினரிடம் போதுமான அளவு இல்லை என்று கூறும் ஹெல்ப் ஏஜ் இந்தியா என்கிற முதியவர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் சத்தியபாபு, இவர்களில் சிலர் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளாக மாறிவிடுகிற அவலமும் தமிழ்நாட்டில் பரவலாகநடக்கிறது என்கிறார்.
அடுத்த பிறவியில் அவளுக்கு செருப்பாக இருக்க ஆசைப்படுகிறேன் ! அவளிடம் மிதிபட இல்லை, என்னைச் சுமந்த அவளை நான் சுமக்க ஆவல் ! - அந்த தாய்மையின் வலி எனக்கு தெரியும் ! - அதனால் தான் அவளோடு சேர்ந்து நானும் அழுதேன் நான் பிறந்த போது!... அவள் சொன்னாள்......மகனே ! என் உயிர் போனால் உன் கண்ணில் நீர் வருமா ! எனக்கு தெரியாது ! - ஆனால் உன் கண்ணில் நீர் வந்தால் என் உயிர் போய் விடும் !...... இதோ.............ஒரு தாயின் ஏக்கம்...... மகனே ! அன்று நீ இருக்க என் கருவறை இருந்தது..... என் வயிற்றில் ! .....இன்று நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்

Copy and WIN : http://ow.ly/KNICZ

No comments:

Post a Comment