Sunday, July 24, 2011

28)கண்கள்- நோய் பாதுகாக்க

         
                  கண்கள் = கவனியுங்கள்
 


          கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன.
      இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால்கூட கண்நோய் வருகிறது.
      இதனால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். 
       தொடர்ந்து டிவி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.

         மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து டிவி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.
      இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும். கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை    ஏற்படலாம்.     

          சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

     அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும்.

       ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும். 
       மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம்.
       இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
        இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

        வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

       எனவே கண்ணில் சிறிய பிரச்சினை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 
       சுயமருத்துவம் செய்வது தவறாகும். 

        இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கம்ப்யூட்டர் திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், 
     கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

        இதில் இரண்டு வகை உண்டு.

    கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. 
     இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும். 
    இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 
      உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம் .

          பாதுகாப்பு முறை: குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம். 

       நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.
       கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம்.
       திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

    சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம்.

     வைட்டமின் ‘ஏ, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
     சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். 
     குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும். கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது.
      கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

       சிவந்த கண்கள் பிரச்சினை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். கண் நோய் ஏற்பட்டால் கைகளை அடிக்கடி கழுவவும். 

      வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உபயோகிக்கவும். கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
       தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

         RECIPE=மருந்து முறை

           சிறுகீரை கூட்டு:       

      பாசிப்பருப்பு 50 கிராம் அளவுக்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். சிறுகீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். 
     சின்ன வெங்காயம் ஒரு கப், பூண்டு ஐந்து பல், புளிக்கரைசல் சிறிதளவு எடுத்து கொள்ளவும். 
       வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். 
       பின்னர் சிறுகீரை சேர்த்து வெந்த பின் பாசிப்பருப்பு வேக வைத்தது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

மிக்சட் புரூட் ஜூஸ்:

     ஆப்பிள் அரை கப், வாழைப்பழம் அரை கப், கருப்பு திராட்சை அரை கப், முலாம்பழம் அரை கப். பழங்களை மிக்சியில் அடித்து வடிகட்டிக் கொள்ளவும்.
     மீண்டும் மிக்சியில் சர்க்கரையை பொடியாக்கி பின்னர் பால் மற்றும் பழச்சாறு சேர்த்து அடித்துக் கொள்ளவும். 
      இந்த மிக்சட் புரூட் ஜூசில் போதுமான அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது.

குச்சிக் கிழங்கு வடை: 

      குச்சிக் கிழங்கை தோல் சீவி கிரைண்டரில் மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
     கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக் கடலையைப் பொடியாக்கிக் கொள்ளவும். 
      சீரகம், சோம்பு, வறமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித்  தழை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
        ஊற வைத்த பருப்பு வகைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் பொட்டுக் கடலைத் தூள் மற்றும் சீரகம் உள்ளிட்ட பொருட்களைக் கலந்து, அரைத்து வைத்த குச்சிக் கிழங்கு மாவையும் சேர்த்து வடை பதத்துக்கு பிசையவும். 
     தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் குறைவாக சேர்க்கவும்.

           DIET= வழக்கமாக சாப்பிட வேண்டியவை

         வழக்கமாக கண் பிரச்னையானது தலைவலி, ஒற்றைத் தலைவலி, கிருமித் தொற்று ஆகியவற்றால் வரும்  உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு  இதற்கான வாய்ப்பு அதிகம். 

      இவர்கள் தூசு, புகை உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். அதிக வெளிச்சம், அதிக இருட்டு தவிர்க்கவும். 
       நீண்ட நாள் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 
       கண்நோய் தாக்குதல் உள்ள சமயத்தில் வைட்டமின் ஏ சத்து உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.

        வைட்டமின் ஏ சத்து அனைத்து வகையான பச்சைக் கீரைகள், வாழைப்பழம், மாம்பழம், கேரட், காலிபிளவர், முட்டைக்கோஸ், மீன் மாத்திரை, பழ வகைகளிலும் உள்ளது. 

       தினமும் கட்டாயம் உணவில் கீரை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வகையான பழச்சாறு அருந்த வேண்டும். மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

       அசைவம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. தினமும் அரை மணி நேரம் வாக்கிங் அவசியம். 

        உணவில் சாதத்தின் அளவை விட காய்கறிகளின் அளவு அதிகம்இருக்க வேண்டும்.
        டீ, காபிக்கு பதிலாக பால் சாப்பிடலாம். இந்த உணவு முறையை கடைபிடித்தால் கண் நோய்கள் உடனடியாக சரியாகிவிடும்.

      பாட்டி வைத்தியம்

        கண்ணில் நீர் வடிதல் பிரச்னை உள்ளவர்கள் வேளைக்கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

       வேப்பிலை, சுக்கு, இந்துப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூடுபடுத்தி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்வலி மற்றும் கண் அரிப்பு குணமாகும்.

        பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். கண்ணில் நீர்வடிதல் பிரச் னைக்கும் தீர்வு காணலாம்.

          உடல் சூட்டின் காரணமாக கண்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும்.

               வில்வ இலையைப் பொடி செய்து வெந்தயம் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

        இரவில் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

          லெட்டூஸ் கீரையை அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும்.

             முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

         மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்களில் நீர்வடிவது நிற்கும்.

No comments:

Post a Comment