Saturday, September 17, 2011

அ.சவுந்திரராசன் .M.L.A.

                சட்டசபையில் அ.சவுந்திரராசன்- M.L.A.பேச்சு

    அரசு போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்துவது அவசியம்.


                                           A.SOUNDARARAJAN.C.I.T.U.



     அன்பு நண்பர்களே,வணக்கம்.
        

              சட்டப்பேரவையில் வியாழன்(செப்டெம்பர்-08) அன்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் அ.சவுந்திரராசன் M.L.A.,அவர்கள் பேசியதாவது=

       சாலைகளில் வாகன அடர்த்தி தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது.எவ்வளவுதான் சாலையை அகலப்படுத்தினாலும்  வாகன அடர்த்தியைக் குறைப்பதற்கு அ.தி.மு.க.அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


      பொதுப்போக்குவரத்தின் வெற்றி என்பதே தனிப்போக்குவரத்து வாகனங்களைக் கட்டுப்படுத்துவதிலும்,மட்டுப்படுத்துவதிலும்தான் உள்ளது.

         அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தில் கனரக வாகனம், மூன்று சக்கர வாகனம், அதேபோல இலகு ரக வாகன எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.  இது வளர்ச்சி என்று ஒரு பக்கத்தில் தோன்றினாலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது. 

       அனைத்து போக்குவரத்தையும் ஒருங்கிணைத்து ஒரே பயணச்சீட்டு திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். 

      உதாரணமாக சென்னையில் பேருந்தில் இருந்து மெட்ரோ ரயில், மெட்ரோ ரயிலில் இருந்து மோனோ ரயில், மோனோ ரயிலில் இருந்து பறக்கும் ரயில் என அனைத்து பொதுப் போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

        சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படவேண்டும்.

      '' ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரப்படும் என்று போர்டுவைத்திருப்பதை   'மாற்றி ''வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கப்படும்'' என்று போர்டு வைத்து செயல்பட வேண்டும்.

      வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இந்தப் பிரச்சினையில் ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

        பொதுப்போக்குவரத்தில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஓட்டுனரின் உரிமம் பறிக்கப்படுகிறது. இந்தத்தண்டனை மிகக்கொடுமையாக உள்ளது.இந்த விசயத்தில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


      விபத்து ஏற்பட்டதும் ஓட்டுனருக்கு மற்ற தண்டனை வழங்குவதில் கருத்து வேறுபாடு இல்லை.

     நமது போக்குவரத்துக்கழக ஓட்டுனர்கள் உட்பட  லாரி ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக வாகனத்தை பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக ஓட்ட வேண்டிய நிலையில் உள்ளனர்.தொடர்ச்சியாக 800கிலோமீட்டர் ஓட்டவேண்டும் என்ற வேலைப்பளு உள்ளது.

      விபத்துகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.இதனால் , உயிரிழப்பு மட்டுமின்றி அரசாங்கம் வழங்கும் இழப்பீடும் அதிகரிக்கிறது.இதனால் போக்குவரத்து கழகங்களுக்கும் நிதிச்சுமை ஏற்படுகிறது.

      அதோடு நமது போக்குவரத்துக் கழகங்களின் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மாதக்கணக்கில் நீதிமன்ற வளாகங்களில் வீணாக நின்று கொண்டிருக்கின்றன.

     விபத்துகளுக்கு அதிக வேகமும் ஒரு காரணம்.ஆம்னி பஸ் போன்ற தனியார் வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.இவர்களுக்குரிய கட்டுப்பாடுகள் போக்குவரத்து சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை.

       ஆனால் போக்குவரத்துக் கழக வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு கடுமையாக அமுலாக்கப்படுகிறது.

      (1) பிரகாசமான முகப்பு விளக்குகளை மற்ற தனியார் வாகனங்கள் பயன்படுத்தும் போது நமது போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்த தடை. 

       2) அதிக சப்தமுள்ள காற்று ஒலிப்பான்களை மற்ற தனியார் வாகனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் நமது போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்த தடை.

      (3) அதிவேகமாக செல்ல மற்ற வாகனங்களுக்கு அனுமதி ஆனால் நமது போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு மட்டும் வேகக்ட்டுப்பாடு.

         இப்படியெல்லாம் தனியார் வாகனங்களுக்கு அதிக வாய்ப்புகளும்,அனுமதியும் வழங்கிவிட்டு நமது போக்குவரத்துக்கழக வாகனங்களுக்கு மட்டும் மறுக்கப்படும்போது தனியார்  வாகனங்களுக்கு ஈடாக நமது போக்குவரத்து வாகனங்கள் செயல்பட முடியாமல் போகின்றன.

     நமது ஓட்டுனர்கள் திறமை குறைந்தவர்கள் அல்ல. 

     நமது கழகப் பேருந்துகளுக்கு மட்டும் வேகக்கட்டுப்பாடு என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு தனியார் வண்டிகளோடு போட்டிபோடுகின்ற நிலைமையை நாமே கட்டுப்படுத்தி விடுகின்றோம்.

     நமது போக்குவரத்துக்கழக ஓட்டுனர்களுக்கும் உரிய வசதிகளை செய்து கொடுத்தால் நமது கழகங்களுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும்.

     ஆம்னி பேருந்துகளை ஒப்பந்த ஊர்திகளாக ஓட்டுவதற்குப் பதிலாக நிரந்தர ஊர்திகளாக அதாவது பர்மிட் எடுத்த ரெகுலர் பஸ் போன்று இயக்குவதாலும் நமது போக்குவரத்துக்கழகங்களுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்கிறது.இதனாலும் அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 




        நமக்கான வருவாய் வழித்தடங்கள் அனைத்தும் தனியாருக்கு என்ற நிலை தொடர்வது அரசுக்கு வருவாய் இழப்பாகிறது.இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் போக்குவரத்துக்கழகங்கள் வருவாய் ஈட்ட முடியும்.


      மினிப் பேருந்துகளை அரசே இயக்குவதுதான் நமது போக்குவரத்துக்கழகங்களுக்கும் நல்லது.இரண்டு துறைகளுக்கும் ஒரு ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த முடியும்.

    ஓட்டுனர்,நடத்துனர் என பணி நியமனம் நடந்ததே தவிர பழுது பார்ப்பு பிரிவில் ஒருவரைக்கூட நியமிக்கவில்லை.எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களின் பராமரிப்பு செவ்வனே நடைபெற தொழில்நுட்ப தொழிலாளர்களை அதிக அளவில் பணி அமர்த்த வேண்டும்.


      பல்வேறு பிரிவினர் நீதிமன்றம் வரை சென்றுதீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

       அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் செல்லும் மாணவர்களுக்கு ஆகும் செலவில் 56 விழுக்காடு தொகையை அரசு ஏற்றுக்கொள்கிறது.44 விழுக்காடு தொகையை போக்குவரத்துக்கழகங்களே ஏற்றுக்கொள்கின்றன.




       இப்போது இருக்கின்ற  நிதிநிலையில் கல்வித்துறைக்கு செலவிடும் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இந்தப்பணிக்காக எடுத்துக்கொண்டால் போக்குவரத்துக்கழகங்களின் நிதிச்சுமை குறையும். 


          அதே நேரத்தில் போக்குவரத்துக்கழகங்களுக்கு வசதி இருக்குமேயானால் அரசுக்கு உதவி செய்வதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.மோட்டார்வாகன பராமரிப்புப் பிரிவை வலுப்படுத்தவும்,நவீனப்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்.     

 PARAMESDRIVER.BLOGSPOT.COM-//- SATHYAMANGALAM-ERODE-DT.

   

No comments:

Post a Comment