Monday, August 31, 2015

ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீ

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். ஓட்டுறது ஒரு ஏரு,அதை வெளாவுலே புடி என்றானாம் என்ற பழமொழிக்கு விளக்கம். இதோ.
 
"ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானாம்!"
ஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.
ஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது.
எப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.
அதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.
முதல் வெளா முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும்.
அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும்.
அப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும்.
ஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது.
ஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ,
அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்!

உடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் வெளாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள்.
அடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.
இதுதான் வெளாவுல புடி அப்படிங்கிறதுக்குப் பொருள் ஆகும்.
அப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.
ஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரச்சினை வராது!
பெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம்.
ஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை!
அதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக "ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானாம்!" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்!

No comments:

Post a Comment